இந்தியா

2ஜி: புயலைக் கிளப்பும் முன்னாள் டிராய் தலைவரின் புத்தகம்

பிடிஐ

முன்னாள் டிராய் தலைவர் பிரதீப் பைஜல் எழுதிய 2ஜி உள்ளிட்ட இந்திய சீர்திருத்தங்கள் பற்றிய புதிய நூலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பற்றி அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

The Complete Story of Indian Reforms: 2G, Power and Private Enterprise — A Practitioner’s Diary, என்ற நூலில் அவர் 2ஜி ஊழல் பற்றி எழுதியதில் ஒருசில விவரங்கள் வெளியாகியுள்ளன:

"அவர்கள் (சிபிஐ) என்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எச்சரித்தனர், அதாவது 2ஜி உரிமங்கள் வழங்குவதில் நான் ஒத்துழைக்காவிட்டால் எனக்கு தீமை விளையும் என்று எச்சரித்தே வந்தனர், 2ஜி விவகாரத்தில் அவர்களது திட்டத்தின் படி நான் செயல்படாவிட்டால் என்ன நடக்கும் என்பதை பொருளாதார நிபுணர்-பிரதமர் எனக்கு எச்சரித்ததும் இதைத்தான்.

நான் அனைத்தையும் தெரிவித்துவிட்டேன், இது 100% சரியானது. இதனை நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உள்ளன” என்று எழுதியுள்ளார்.

ஒருங்கிணைந்த உரிமங்கள் வழங்கும் திட்டத்தில் இவர் சில பரிந்துரைகளை மேற்கொண்டார். அதன் பிறகே தன்னை அமைச்சகம் சரியாக நடத்தவில்லை என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த விவகாரம்தான் சில பிரச்சினைகளை கிளப்பின. இதனால் என்னப்பற்றி அவதூறு அனுமானங்களை அப்போதைய ஆளும் கட்சி பரப்பி வந்தது. நான் பிரதமரைச் சந்தித்து இது குறித்து கூறிய போது, நான் அமைச்சரின் பேச்சை கேட்க வேண்டும் என்றும் அவரது கருத்துகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். நானோ அவரது பார்வை என்னை பெரிய சிக்கலுக்குள் தள்ளி விடும் என்றேன்.

அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனை நான் முதன் முதலாகச் சந்தித்த போது, முதலில் வருபவர்கள் அடிப்படையில் உரிமங்கள் வழங்கும் பழைய முறைக்கு மாற்றாக ஒருங்கிணைந்த உரிமங்கள் முறை குறித்த எனது பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், மீறி நான் மேற்கொண்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் கூறினார்.

பிரதமரிடம் இவ்விவகாரத்தை எடுத்துச் சென்ற போது, அமைச்சருடன் ஒத்துழைப்பதுதான் சரி என்றும் ஒத்துழைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு பங்கம் ஏற்படும் என்றும் கூறினார்.

தயாநிதி மாறனும் அவருக்குப் பின் அமைச்சராக வந்த அ.ராசாவும் எனது பரிந்துரைகளை கிடப்பில் போட்டு எந்த வித விதிகளையும், முறைகளையும் கடைபிடிக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு உரிமங்களை வழங்கியுள்ளனர்.

எனவே பிரதமர், சிதம்பரம், கபில் சிபல் ஆகியோருடன் இணைந்து அனைவரும் இதில் செயல்பட்டதாக நான் ஊகித்தறியவே முடிந்தது. இவர்கள் சிபிஐ விசாரணையையும் வழிநடத்தினர். கோப்புகள் அகற்றப்பட்டது. ஊடகங்களில் தவறான அறிக்கைகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் டிராய்க்கு எதிராக செயல்பட்டனர்” என்று அந்த நூலில் கூறியுள்ளார்.

மேலும், ரத்தன் டாடா, தயாநிதி மாறன் விவகாரம் பற்றி ரத்தன் டாடா தன்னிடம் 2004-இல் கூறிய விவகாரம் பற்றி குறிப்பிடும் போது, “டாடா ஸ்கை-சன் நெட்வொர்க் இணைப்புக்கு ரத்தன் டாடா ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் அவரை சீரழித்து விடுவதாகவும் தயாநிதி மாறன் மிரட்டியதாக ரத்தன் என்னிடம் 2004-இல் தெரிவித்தார். ரத்தன் டாடா ஒத்துழைக்க மறுத்து விட்டார். இதனையடுத்து 2ஜி வழக்கில் ரத்தன் டாடாவையும் அருண் ஷோரியையும் நான் நுழைத்தால் எனக்கு பங்கம் ஏற்படாது என்று கூறினர்” என்று தன் நூலில் எழுதியுள்ளார்.

மேலும், "அன்று நான் தயாநிதி மாறன், பிரதமர் ஆகியோர் பேச்சைக் கேட்டு ஒத்துழைப்பு நல்கியிருந்தால் நான் இன்று 2ஜி ஊழலில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன்” என்று அந்த நூலில் பைஜல் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT