இந்தியா

ஆந்திர வெயில்: சனிக்கிழமை மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலி

எஸ்.சந்தீப் குமார்

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக 47 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் கொடுமைக்கு நேற்று, சனிக்கிழமை மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அரசுதரப்பினர் 95 பேர்கள் நேற்று மட்டும் பலியானதை உறுதி செய்ய, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கிறது.

ஒரே நாளில் நேற்று பிரகாசம் மாவட்டத்தில் மட்டும் 40 பேர்களும், குண்டூரில் 20 பேர்களும் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுமார் 220 பேர் பலியாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி கூலித் தொழிலாளர்கள், வீடில்லாதவர்கள் மற்றும் முதியோர் அதிகம் இந்த கொடுமையான வெயிலுக்கு பலியாகியுள்ளதாக அரசு தரப்பு செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை இருக்க இருக்க மோசமாக போய்க் கொண்டிருப்பதையடுத்து முதல்வர் சந்திர பாபு நாயுடு, மாவட்ட ஆட்சியர்களை அவசரமாகக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் சந்திர பாபு நாயுடு. வெள்ளிக்கிழமை வரை அதிகாரிகள் ரூ.50,000 வரை அளித்துள்ளனர்.

சனிக்கிழமை பலியான 40 பேர்களுடன் பிரகாசம் மாவட்ட பலி எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இன்று உடனடியாக ஆங்காங்கே குடிநீர் சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணா, நந்திகாமா, விஜயவாடாவில் 47 டிகிரி செல்சியஸ் வெயில் குறையும் வழியாகத் தெரியவில்லை. ராயலசீமா பகுதியில் கடற்கரைப் பகுதிகளை விட வெயிலின் தாக்கம் சற்றே குறைவாக இருந்து வருகிறது.

SCROLL FOR NEXT