மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதற்கு ராகுலும் அவரது குழுவினரும்தான் காரணம் என்று மிலிந்த் தியோரா மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா தெற்கு மும்பை தொகுதியில் சிவசேனை வேட்பாளர் அரவிந்த் சாவந்திடம் தோல்வியுற்றார். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது குறித்து கடந்த புதன்கிழமை அவர் கூறியபோது, அடிமட்ட தொண்டர்களின் குரல் ராகுலின் ஆலோசகர்களுக்கு கேட்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதேவிவகாரம் தொடர்பாக ட்விட்டரில் வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள கருத்தில், கட்சியின் மீதுள்ள உண்மையான விசுவாசத்தால்தான் எனது கருத்தை வெளிப்படையாகக் கூறினேன், கட்சியின் தோல்வி குறித்து நேர்மையான முறையில் தயவு தாட்சண்யம் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர் சத்யவிரத சதுர்வேதியும் மிலிந்த் தியோராவின் கருத்தை ஆமோதித்துள்ளார். காங்கிரஸின் தோல்வி குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று அவர் யோசனை கூறியுள்ளார்.
பிரியா தத் கருத்து
நடிகர் சுனில் தத்தின் மகளான பிரியா தத் வடக்கு-மத்திய மும்பை தொகுதியில் 2004, 2009 தேர்தல்களில் இரண்டு முறை அடுத்ததடுத்து வெற்றி பெற்றார். ஆனால் 2014 தேர்தலில் பாஜக வேட்பாளர் பூனம் மகாஜனிடம் அவர் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் வியாழக்கிழமை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கட்சித் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே உறவு அறுந்ததே தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டார்.
அவரும் காங்கிரஸ் தலைமையை மறைமுகமாகத் தாக்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியபோது, தோல்விக்கு தனிநபர் யாரையும் குற்றம்சாட்ட முடியாது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.