இந்தியா

கிரிக்கெட் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை: ஜம்முவில் பயங்கரம்

பிடிஐ

ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் ‘நட்பு முறை கிரிக்கெட்’ போட்டி ஒன்றில் இரு அணி வீரர்களில் சிலரிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் போய் முடிந்துள்ளது.

வீரர்களுக்கிடையே ஏற்பட்ட அடிதடி ரகளையில் ராகேஷ் குமார் என்ற வாலிபர் (25) படுகாயம் அடைந்தார். இவருடன் 3 பேருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு ராகேஷ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜம்மு மாவட்ட அக்னூர் பகுதி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஜம்மு உயர் போலீஸ் அதிகாரி உத்தம் சந்த் இது பற்றி கூறும் போது, “ஜம்மு மாவட்டத்தில் அக்னூர் பகுதியில் இரு அணிகள் நட்பு முறையான கிரிக்கெட் ஆட்டத்தில் ஞாயிறன்று விளையாடினர். ஆனால் திடீரென இரு அணிகளிடையே கடும் சண்டை மூண்டுள்ளது. இதில் 3 பேர் காயமடைந்தனர். அதில் ராகேஷ் குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

காத்ரா பகுதியிலிருந்து கொலைக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பேரை கைது செய்துள்ளோம்” என்றார்.

இந்த படுகொலையை அடுத்து உயிரிழந்த ராகேஷ் குமார் குடும்பத்தினர் உட்பட காயமடைந்த நபர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் சாலைப் போக்குவரத்து இதனால் நேற்று பாதிக்கப்பட்டது.

பிறகு போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கித் தரப்படும் என்று உத்தரவாதம் அளிக்க அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் நேற்று ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே தகராறு மூண்டதன் பின்னணி விவரங்கள் விசாரணை முடிவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT