இந்தியா

ஏமனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தயார் நிலையில் 5 கப்பல்கள், 4 விமானங்கள்

செய்திப்பிரிவு

ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்க 5 கப்பல்கள், 4 விமானங் களை மத்திய அரசு அனுப்பி யுள்ளது. மேலும் மீட்புப் பணி களை ஒருங்கிணைக்க ஜிபோட்டி நாட்டில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் முகாமிட்டுள்ளார்.

ஏமனில் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ள ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் மீது சவூதி அரேபிய கூட்டுப் படையினர் கடந்த 4 நாள்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் ஏமனில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

அங்கு தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 4000 மேற்பட்ட இந்தியர்கள் பணி யாற்றி வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 400 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ளவர்களை மீட்க ஐ.என்.எஸ். சுமித்ரா, மும்பை, தர்காஷ் உட்பட ஐந்து கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் ஏமனுக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஒரு பயணிகள் விமானம் ஓமனிலும் மற்றொரு விமானம் மஸ்கட்டிலும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏமனுக்கு அருகில் உள்ள ஜிபோட்டி நாட்டில் இரண்டு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விமானத்திலும் 180 பேர் வரை அழைத்து வர முடியும்.

ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்கள் கடல் மார்க்கமாக ஜிபோட்டி நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து விமானங்கள் மூலம் மும்பை மற்றும் கொச்சிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் ஐந்து கப்பல்கள் ஜிபோட்டி, ஓமன் உள்ளிட்ட நாடுகளின் அருகில் நிறுத்தப்பட்டுள்ளன.

சவுதி மன்னர் உதவி

இதனிடையே ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக சவுதி மன்னர் அப்துல் ஆசிஷ் அல் சாத் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியாவுக்கு அனைத்து விதத்திலும் உதவ சவுதி மன்னர் உறுதி அளித்தார்.

மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங்கும், இந்திய தூதரக மூத்த அதிகாரிகளும் ஜிபோட்டி சிட்டியில் முகாமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT