பாஜக தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களில் குறைந்த வயதுடையவர் என்ற பெருமையை பெற்ற நிதின் கட்கரி (57) தனது அணுகுமுறையால் சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவர்.
மக்களவைக்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், மகாராஷ்டிரத்தில் அமைச்சராகவும் மேலவை எதிர்க்கட்சித் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். தேசிய அளவிலும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
நாக்பூரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, மும்பையில் அதிக எண்ணிக்கையில் மேம்பாலங்கள் கட்டியவர். இதனால் ‘ப்ளை ஓவர் மேன்’ என்று அழைக்கப்பட்டார். நாக்பூரில் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தனது சொந்த ஊரிலும் புகழ் பெற்றார்.
மும்பை புனே எக்ஸ்பிரஸ்வே-யின் வெற்றி இவருக்கு புகழை பெற்றுத் தந்தது. மாணவப் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்தார். பாஜக மாணவர் அமைப்பின் (ஏபிவிபி) தலைவராக அரசியலில் நுழைந்தார். பின்னர் பாஜக இளைஞர் அணியில் இணைந்தார்.
எம்.காம்., எல்.எல்.பி. படித்த கட்கரி பின்னர் தொழில் நிர்வாகத்தில் டிப்ளமோ பெற்றுள்ளார். இவருக்கு காஞ்சன் என்கிற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.