‘‘தெற்காசியாவில் சண்டைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவை வறுமை ஒழிப்பு, மனிதகுல மேம்பாட்டுக்குத் தடைகளாக உள்ளன’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய பல்கலைக்கழகம் (சவுத் ஏஷியன் யுனிவர்சிட்டி) ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ச்சியும் வறுமை ஒழிப்பும் முரண்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
மேலும், தெற்காசிய நாடு களுக்குள் நிலவும் சண்டை சச்சரவுகள், பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவை வறுமை ஒழிப்புக்குப் பெரும் தடைகளாக உள்ளன. இதனால் தெற்காசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. தெற்காசிய மற்றும் சர்வதேச அளவில் திருப்திகரமாக தீர்மானம் கொண்டு வந்து செயலாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.
தெற்காசியாவில் தனிப்பட்ட முறையில் ஓரிரு நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், பிராந்தியம் முழுவதும் இந்த வளர்ச்சி ஏற்பட வேண்டும். இந்தியாவில் வளர்ச்சியும் வறுமை ஒழிப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் உள்ள தற்கு, சமூக சமத்துவம் இல்லாததே காரணம்.
இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.