இந்தியா

ராஜபக்சே வருகைக்கு கர்நாடகத் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: பெங்களூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

இரா.வினோத்

டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற இருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அவரது வருகையைக் கண்டிக்கும் விதமாக கர்நாடக மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி டெல்லியில் திங்கள்கிழமை பதவியேற்க இருக்கிறார். அவரது பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ராஜபக்சேவின் வருகைக்கு கர்நாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழர்களை இழிவுபடுத்தும் செயல்

கோலார் தங்கவயல் தமிழ்ச்சங்க தலைவர் கலையரசன் கூறியபோது, “2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணமான ராஜபக்சே அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மனிதநேய அமைப்புகளில் அவர் மீது வழக்குகள் விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்''என்றார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பெங்களூர் டவுன் ஹால் எதிரே நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் விடுதலைக் கழகம், தனித்தமிழர் சேனை, உலகத் தமிழ் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.ராசன், புலவர் மகிபை பாவிசைக்கோ உள்ளிட்ட‌ தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் கன்னட அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.

SCROLL FOR NEXT