இந்தியா

விவசாயிகளுக்கு உ.பி. அரசு அளித்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பியது

பிடிஐ

உத்திரப் பிரதேச மாநில, மதுரா மாவட்ட விவசாயிகளுக்கு அம்மாநில அரசு பயிர் சேதங்களுக்காக அளித்த இழப்பீட்டுக்கான காசோலை பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

பருவநிலை தவறி பெய்த மழை மற்றும் பிற இயற்கைச் சீற்றங்கள் காரணமாக பயிர்கள் கடும் சேதமடைந்தன. வட இந்தியா முழுதும் இதே பிரச்சினைகள் இருந்து வருவதால் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக தங்கள் கோபாவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரங்களில் கடன் தொல்லையால் சுமார் 40 விவசாயிகள் இப்பகுதிகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரா விவசாயிகளுக்கு இழபீடுக்காக உ.பி.அரசு அளித்த காசோலைகளுக்கான பணம் வங்கியில் இல்லை. இது அவர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. இது குறித்து சுரேஷ் சந்திரா என்ற விவசாயி கூறும்போது, “ஏப்ரல் 11-ம் தேதி காசோலையைப் பெற்றேன். வங்கியில் கொடுத்தால் உடனே பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினர். அப்படியே செய்தேன், ஆனால் காசோலை போதிய பணம் இல்லாமல் திரும்பிக் கொடுக்கப்பட்டது. கணக்கில் போதிய பணம் இல்லை என்று குறிப்புடன் திரும்பி வந்தது” என்றார்.

ஆனால், உ.பி. அரசோ, இழப்பீடுக்காக 32.29 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கியதாக கூறுகிறது.

ஃபைஸாபாத் மாவட்ட நிர்வாகம் ரூ.300க்கும் குறைவான தொகைக்கான காசோலைகளையே அளித்துள்ளது. மாவட்ட மேஜிஸ்ட்ரேட் வங்கி மேலாளர்களை அழைத்து விவசாயிகளுக்கான தொகையை மறுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 3 அல்லது 4 காசோலைகளே திரும்பியுள்ளது. இதனை உடனடியாக தீர்த்து வைப்போம் என்றார்.

SCROLL FOR NEXT