காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, விவசாயி களின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வி அக்கட்சியைத் துவளச் செய் திருக்கிறது. அடுத்தடுத்த சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பெற்ற தோல்வி, காங்கிரஸின் அஸ்திவாரத்தையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.
அக்கட்சியின் அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படும் ராகுல், இடைக்கால ஓய்வை முடித்துக் கொண்டு பாஜகவுக்கு எதிராக தீவிரமாகக் களமிறங்கி யிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பொதுக் கூட்டத்திலும் சரி, நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதிர்த்து பட்ஜெட் தொடரில் அவர் பேசிய தாகட்டும் சரி காங்கிரஸுக்கு கொஞ்சம் உற்சாகத்தை ஊட்டி யிருக்கிறது.
எனவே, காங்கிரஸ் கட்சியை விவசாயிகள் மட்டத்தில் வேரூன்றச் செய்வதற்காக அவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து பாதயாத்திரை செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார்.
விவசாயிகளின் தற்கொலை அதிகமாக நிகழும் மகாராஷ் டிரத்தின் விதர்பா மாவட்டம் அல்லது தெலங்கானா மாநிலத்திலுள்ள மேதக் மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசம், ஆந்திரம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் அங்கு சென்று விவசாயிகளைச் சந்திக்கவுள்ளார் ராகுல்.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்புத் துறை பொறுப்பாளர் ரண்தீப் சுர்ஜிவா லாவைத் தொடர்பு கொண்டபோது, “சில நாட்களில் ராகுல் வேளாண் பாதயாத்திரை தொடங்கவுள்ளார். விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளான அனைத்து மாநிலங்களுக்கும் அவர் செல்வார். அவரின் விரிவான பயணத்திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றார் அவர்.
மக்களவைத் தேர்தல், ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் என தனித்தும் கூட்டணியுடனும் ஆட்சிபுரிந்த மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகள் என துவண்டு போயிருக்கும் கட்சியை மீண்டும் கட்டமைக்க, நிலம் கையகப் படுத்தும் மசோதா, விவசாயிகளின் பிரச்சினை ஆகியவற்றை நல்ல வாய்ப்பாக பயன்படுத்த நினைக் கிறது காங்கிரஸ்.
பழைய சூத்திரம்
காங்கிரஸ் துவண்டுபோன சமயங்களில் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் இதேபோன்ற மிகப்பெரிய அளவில் மக்களைச் சந்திக்கும் போராட்டங்களை நடத்தினர். 1977, 1989ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இப்போராட்டங்கள் காங்கிரஸுக்கு நல்ல பலனையே அளித்தன. எனவே, ராகுலின் வேளாண் பாதயாத்திரை நல்ல அறுவடையைத் தரும் என காங்கிரஸ் நம்புகிறது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் விவசாயி களின் பிரச்சினையைக் கையில் எடுத்து பெரும் பாதயாத்திரையை நடத்தினார். அது காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது.
30 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சரத் பவார், விவசாயிகளின் பிரச்சினையைக் கையிலெடுத்து ‘சேத்கரி திண்டி’ எனப் பெரும் போராட்டத்தை முன்னிறுத்தினார். அது அவருக்கு கைகொடுக்கவே செய்தது.
காங்கிரஸ் துவண்டபோதெல் லாம் விவசாயிகளின் பிரச்சினையைக் கையிலெடுத்து மீண்டும் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது. அதே வெற்றி சூத்திரம் தற்போதும் பலனளிக்கும் என நம்புகிறார் ராகுல்.