நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக மகாபாரதப் போர் நடக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாஜக-வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த லாலு கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா, வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருகிறோம் என்ற பொய் வாக்குறுதி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்று கூறி ஒவ்வொருவரையும் ஏமாற்றி, விவசாயிகளையும் ஏமாற்றும் பாஜக அரசை சும்மா விட மாட்டோம். இந்த விவகாரங்களில் பாஜக-வுக்கு எதிராக மகாபாரதப் போர் நடத்துவோம்.
இன்னும் நிறைய கட்சிகளை இணைப்பதன் வாயிலாக பாஜக-வை வெளியேற்ற தெளிவான செய்தியை ராஷ்ட்ரிய ஜனதா தளம் அனுப்பும். நாங்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா, மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் பேசவிருக்கிறோம்.
இந்த இணைப்பு மதவாதச் சக்திகளுக்கு எதிராக மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி சக்திகளை ஒன்றிணைக்கும். மதச்சார்பின்மை சார்ந்த வாக்குகளை பிரிப்பதன்மூலம் மதவாதச் சக்திகள் இந்த நாட்டில் பலம் பெற்று வருகின்றன. தேர்தல்களை இணைந்து சந்திப்பதன் மூலம் மக்கள் மத்தியில் எங்கள் மீதான நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.” என்றார்.