இந்தியா

முஸ்லிம்களும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்ற வேண்டும்: பாஜக எம்.பி.

பிடிஐ

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கடுமையாகக் கடைபிடிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்‌ஷி மஹராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தகைய சட்டத்தை கடைபிடிக்காதவர்களின் வாக்குரிமையையும் ரத்து செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தையும் அவர் கூறியுள்ளார்.

"இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள முன்வருவது போல் முஸ்லிம்களும் முன்வர வேண்டும். அனைவருக்கும் ஒரே சட்டம் தேவை. நமது ஆட்சியில் ஒரு பிரிவினருக்கு திருப்தி செய்யும் போக்கு கூடாது.

முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் அனைவருக்குமான பொதுச் சட்டம் தேவை என்றே கூறுகிறேன்.

4 குழந்தைகள் பற்றி பேசினால் நிறைய சலசலப்புகளும் சர்ச்சைகளும் எழுப்பப் படுகின்றன. ஆனால் 4 மனைவிகளை வைத்துக் கொண்டு 40 குழந்தைகளை அவர்கள் பெற்றுக் கொள்வது பற்றி ஒருவரும் வாயைத் திறப்பதில்லை.

குடும்பக் கட்டுப்பாடு அவசியம். நாடு சுதந்திரம் அடைந்த போது மக்கள் தொகை 30 கோடி இருந்தது. தற்போது 130 கோடி. இதற்கு யார் பொறுப்பு? எனவே அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே சட்டம் தேவை, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என்று அனைவருக்கும் ஒரே சட்டம் தேவை" என்று சாக்‌ஷி மகராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT