உத்தரவாதமாக ஆண் குழந்தை தரும் மருந்து, யோகா குரு பாபா ராம்தேவின் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த மருந்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது.
இப்பிரச்சினையில் கவனம் செலுத்துவதாகவும், அதுபோன்றதொரு பொருளுக்கு எப்படி உரிமம் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
ஆண் குழந்தையை உத்தரவாதமாக அளிக்கும் மருந்து பாபா ராம்தேவுக்குச் சொந்தமான மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்சினையை மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் கே.சி. தியாகி எழுப்பினார். “இதுபோன்ற ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒருநபர் எவ்வாறு, ‘பெண் குழந்தையைப் பாதுகாப்போம்-பெண் கல்வியைப் போற்றுவோம்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹரியாணா மாநிலத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்” எனக் கேள்வியெழுப்பினார்.
தியாகியுடன் மற்ற சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர். அந்த மருந்துக் கடைக்கு எதிராக விசாரணை நடத்த அவர்கள் வலியுறுத்தினர்.
சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் அந்த மருந்துகளைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சீதாராம் யெச்சூரி பேசும்போது, “இதுபோன்ற மாத்திரை மூடநம்பிக்கையை ஊக்குவிப்பது மட்டுமின்றி அறிவியல் பண்புகளுக்கு எதிரானதும் கூட” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் பேசும்போது, “அந்த மாத்திரைக்கான உரிமத்தை ரத்து செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
இதுகுறித்த விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.