நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்க உள்ளார். நரேந்திர மோடி, சிறிய அளவிளான அமைச்சரவையையே விரும்புகிறார் என்பதை அவரது அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
ஒரு சில அமைச்சகங்களை ஒருங்கிணைத்து அவற்றை ஒரே மத்திய அமைச்சர் தலைமையின் கீழ் கொண்டு வர நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக அந்த அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஜராத் பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சாதுர்யமான ஆட்சியை செலுத்துவதே நரேந்திர மோடியின் இலக்கு. அரசாங்கத்தின் மேலடுக்கில் அதிகார மட்டத்தை குறைத்துக் கொண்டு அடித்தட்டில் அதை விரிவாக்கம் செய்யவே அவர் விரும்புகிறார்" என கூறப்பட்டுள்ளது.
'மிகச் சிறிய அரசாங்கம், மிகப் பெரிய அரசாட்சி' இது மோடியின் திட்டம். புதிய பிரதமர், அரசாட்சி முறையிலும், அரசுப் பணிகளை செய்யும் பாங்கிலும் மாற்றத்தை கொண்டு வர உந்துசக்தியாக இருப்பார்.
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடியுடன் பல அடுக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தினார். மூத்த தலைவர் அருண் ஜேட்லி, ஆர்.எஸ்.எஸ். செயல்வீரர் சுரேஷ் சோனியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முக்கிய தலைவர்கள் சந்திப்பும், பேச்சுவார்த்தைகளும் புதிய அமைச்சரவை தொடர்பான பல்வேறு ஊகங்களை உலா வரச் செய்துள்ளது.
நிதித் துறைக்கு அருண் ஜேட்லி, உள்துறைக்கு ராஜ்நாத் சிங், விவசாயத் துறைக்கு வெங்கய்ய நாயுடு, ஒருங்கிணைக்கப்பட்ட உட்கட்டமைப்பு அமைச்சகத்திற்கு நிதின் கட்கரி, வர்த்தகத் துறைக்கு பியுஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்ட அமைச்சகம், திட்டக் கமிஷன் துணை தலைவர் பதவிக்கு அருண் ஷோரி ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
சுஷ்மா ஸ்வராஜுக்கு வெளியுறவு அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கப்படலாம். முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மஹாஜன், காரியா முண்டா ஆகியோரது பெயர்கள் மக்களவை சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் அத்வானி உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
கூட்டணி கட்சிகளில், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சிவ சேனா தலைவர் ஆனந்த் கீதே ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
நரேந்திர மோடியை சந்தித்த தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சிக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியுடன் இன்று 30 முதல் 40 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.