இந்தியா

டெல்லி கூட்டம்: ஹசாரே வராததால் மம்தா ஏமாற்றம்; முறிந்ததா 23 நாள் உறவு?

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு அண்ணா ஹசாரே வராததால் ஏமாற்றம் அடைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி. இதனால், இருவரிடையே நிலவிய 23 நாள் நட்பு முடிவுக்கு வந்ததாக சர்ச்சை கிளம்பி உள்ளது.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி டெல்லியில் மம்தாவுடன் செய்தியாளர்களை சந்தித்த லஞ்ச ஒழிப்பு ஆர்வலரான 76 வயது அண்ணா ஹசாரே, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஆதர வளிப்பதாக அறிவித்தார். இருவரும் இணைந்து 'இந்தியாவிற்காக போராடு’’ என்ற பெயரில் ஒரு இயக்கமும் துவங்க இருப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இரு வரும் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. காலை 11.00 மணிக்கு துவங்க இருந்த கூட்டத்தில் வெறும் ஐந்நூறு பேர் கூடியிருந்தனர். மதியம் இரண்டு மணிக்கு சுமார் 3000 பேர் கூடிய போது மம்தா மட்டும் மேடை ஏற, அண்ணா வரவில்லை. இதற்கு, அண்ணாவின் உடல்நிலை சரியில்லை எனக் காரணம் கூறப்பட்டது.

இது குறித்து கூட்டம் துவங்கும் முன்னதாக அண்ணாவின் உதவி யாளரான சுனிதா கதரா செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘அண்ணாவின் உடல்நலம் மிகவும் முக்கியமானது. அவரது உடல்நிலை சரியில்லாமையால், அவர் இந்த வெயிலில் வெளியில் வருவது சரியல்ல. இதற்காக, அவர் வர வேண்டாம் என முடிவு செய்திருந்தால் அது சரியானதுதான். அண்ணா பேச வேண்டியதை அந்தக் கூட்டத்தில் மம்தா வேசுவார்.’ எனக் கூறினார்.

எனினும், மம்தா கட்சியின் எம்பியான முகுல்ராய் அண்ணாவை சந்தித்து சமாதானப்படுத்த முயன்றும் கடைசிநேரம் வரை முடியாமல் போனது. சுமார் 50,000 பேர் வரை கூடும் ராம்லீலா மைதானத்தில் மிகக் குறைவானக் கூட்டம் இருந்தமையால், அண்ணாவை அங்கு செல்ல வேண்டாம் என அவரது முக்கிய ஆதரவாளர்கள் சிலர் அறிவுறுத்தியதாகக் கருதப்படுகிறது. இதை உணர்ந்த மம்தா தனது உரையில் அண்ணாவை நேரடியாக குறிப்பிடாமல் பேசினார்.

இது குறித்து மம்தா கூட்டத் தினரிடையே பேசியதாவது: இது எங்கள் கூட்டம் அல்ல. அண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் இதில் கலந்து கொள்ளவந்தேன். இதற்காக, எனது அனைத்து பணிகளையும் விட்டு விட்டு வந்திருக்கிறேன். குறைவான கூட்டம்தான் காரணம் எனில், முன்பே கூறியிருக்கலாம்.

கொல்கத்தாவில் இருந்து இரண்டு நாட்களில் ரயில்கள் நிரம்பி வழிய தொண்டர்களை கொண்டு வந்து எங்களால் சேர்க்க முடியும். இதற்கு எவருடைய ஆதரவும் கிடைக்கிறதோ, இல்லையோ? நாம் துவங்கிய போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். இந்தக் கூட்டங்களை உ.பி. மற்றும் குஜராத்திலும் நடத்துவோம்.

எந்த ஒரு தனிமனிதனின் சக்தியும் எங்களுக்கு தேவை இல்லை தவிர, நாம் விரும்புவது மக்கள் சக்தியே. எனக்கு எந்த அதிருப்தியும் ஏற்படவில்லை. இது அரசியல் கூட்டம் அல்ல தவிர, ஒரு சமூக பொதுக்கூட்டம். எனத் தெரிவித்தார்.

மேலும், வழக்கமாக விமர்சிக் கும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் சேர்த்து, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவையும் கடுமையாக சாடினார் மம்தா. இவரது கட்சி, டெல்லி உட்பட சுமார் எட்டு மாநிலங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, அண்ணாவுடன் ஒரே மேடையில் பேசினால், தமது முஸ்லிம் ஆதரவை வாபஸ் பெற்று விடுவதாக கொல்கொத்தா மசூதியின் இமாம் எச்சரித்தார். டெல்லியின் கூட்டத்திற்கு பின், சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் படைத்தளபதியான ஜெனரல் வி.கே.சிங், அண்ணாவை சந்தித்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT