நீதிபதிகள் நியமனத்துக்காக அமைக்கப்பட்ட தேசிய நீதிபதி கள் நியமன ஆணையம் செல்லத் தக்கதா என்பது குறித்த வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், எந்தெந்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிப்பர் என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க இதுவரை கொலீஜியம் முறை பின் பற்றப்பட்டது. இந்நிலையில், இதற்கு மாற்றாக தேசிய நீதிபதி கள் நியமன ஆணையம் (என்ஜேஏசி) அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக தேசிய நீதிபதி கள் நியமன ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் அரசிதழில் கடந்த 13-ம் தேதி வெளியானது.
இந்நிலையில் நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர் பான பல்வேறு மனுக்களையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் உறுப்பினராக உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர். தவே நியமிக்கப்பட்டார். அதே சமயம் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்விலும் ஆர்.தவே இடம்பெற்றி ருந்தார்.
“வழக்கை விசாரிக்கும் அனில் ஆர். தவே, ஆணையத்திலும் உறுப்பினராக இருப்பதால், வழக்கை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து தவே தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்” என மனுதாரரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஃபாலி நரிமன் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து தவே, அரசியல் சாசன அமர்விலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
தற்போது, ஆணைய சட்டத்துக்கு எதிரான மனு நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில் ஒரு முடிவை எட்டுவதற்கு முன்பு இவ்வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் யார் என்பதை இறுதி செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதி கே.எஸ்.கேஹர் கூறும்போது, “இவ்விவகாரத்தை விசாரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. நீதிபதி ஆர்.தவே விலகியதை அடுத்து, எனது தலைமையில் இந்த அமர்வை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டதால், விசாரித்து வருகிறேன்.
இந்த அமர்வுக்கு தலைமை வகிக்க எனது பெயர் பரிசீலிக்கப்பட்ட உடனேயே, நான் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதில், வழக்கு முடிவுக்கு வரும் வரை தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்திலோ அல்லது கொலீஜியத்திலோ பங்கேற்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளேன்” என்றார்.
இம்மனுவை நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், மதன் பி லோகுர், குரியன் ஜோசப், ஆதர்ஸ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது விசாரித்து வருகிறது.
இந்த அமர்வு நேற்று கூறும்போது, “யார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். இம்மனு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இது முக்கியமான விவகாரம், இதை நிலுவையில் வைக்க முடியாது. யார் இம்மனுவை விசாரிப்பார்கள் என்பது குறித்த உத்தரவை பிறப்பிக்க உள்ளோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
எதிர்ப்பு
இதனிடையே, நீதிபதி ஆர்.தவேவை வழக்கை விசாரிப்பதிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதற்கு மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால், ஹரீஷ் சால்வே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.