சிகரெட் பிடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் தொடர்பில்லை என்று பாஜகவின் மற்றொரு எம்.பி. ராம் பிரசாத் சர்மா தெரிவித் துள்ளார். இக்கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும், அது உயிரைக் கொல்லும் என்பதைக் கூறும் விளம்பரங்களை சிகரெட் பாக்கெட் உள்ளிட்ட புகை யிலைப் பொருட்களை உள்ளடக்கி யுள்ள உறைகளின் மேல் அச்சிடப்படுகின்றன.
இந்த விளம்பரத்தின் அளவைப் பெரிதுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான சட்டம்- 2003 குறித்து ஆய்வு செய்ய பாஜக எம்.பி திலீப் காந்தி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மத்திய சுகாதார அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், “இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆய்வும் புகையிலைப் பொருட் களால் புற்றுநோய் வரும் என் பதை உறுதிப்படுத்தவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதனால், விளம்பரத்தைப் பெரிதுபடுத்தும் முடிவை மத்திய அரசு தற்காலிக மாக ஒத்திவைத்துள்ளது.
பாஜக எம்.பி.யின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் மற்றொரு பாஜக எம்.பி. ராம் பிரசாத் சர்மாவும் இதேபோன்றதொரு கருத்தைக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வருகிறதா இல்லையா என்பது தொடர்பாக இதுவரை முழு ஆதாரம் எதுவும் இல்லை. புகைபிடிப்பதால் புற்றுநோய் வருகிறதா இல்லையா என்பதை நிரூபிப்பது கடினம். புற்றுநோய்க்கான காரணிகள் புகையிலையில் இருக்கலாம், இல்லாமலிருக்கலாம்; அதில் மூலிகை மருந்தும் இருக்கலாம். அது கண்டுபிடிக்கப்பட வேண்டும். எனவே, மருத்துவர்கள் இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய ரசாயன ஆதராம், மருத்துவ ஆதாரம் ஆகியவற்றின் மூலம் அவற்றை நிரூபிக்க வேண்டும்.
நாங்கள் புகையிலைக்கு ஆதரவானவர்களோ, எதிரானவர் களோ அல்ல. பாரபட்சத்துடன் ஒருசார்பான முடிவை எடுக்க விரும்பவில்லை.
எனக்கு இரு மூத்த வழக்கறிஞர்களைத் தெரியும். அவர்களில் ஒருவர் தினமும் 60 சிகரெட்டுகளைக் குடித்து, தினமும் மது அருந்தும் பழக்கமுடையவர். அவர் 86 வயது வரை உயிர்வாழ்ந்தார். தினமும் 40 சிகரெட்டுகளும், மதுவும் குடித்த மற்றொருவர் 75 வயது வரை உயிர்வாழந்தார். அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சர்க்கரைக்கு தடையா?
மற்றொரு எம்.பி. குப்தா, “தொடர்ச்சியாக பீடி குடித்தும் எவ்வித நோயும் புற்றுநோயும் இல்லாத ஏராளமானவர்களை உதாரணமாகக் கொண்டு வந்து நிறுத்த என்னால் முடியும். சர்க் கரை, அரிசி, உருளைக் கிழங்கு பயன்படுத்துவதால் நீரிழிவு நோய் வருகிறது. அதற்காக அவற்றைத் தடை செய்ய முடியுமா” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இக்கருத்துகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந் துள்ளது.