மகாராஷ்டிர மாநிலத்தில் மின்சாரம் திருடிய வழக்கில் பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் ஹல்வான்கர் மற்றும் அவரது சகோதரருக்கு கோலாபூர் அமர்வு நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கோலாபூர் மாவட்ட பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சுரேஷ் ஹல்வான்கர் மற்றும் அவரது சகோதரர் மகாதேவ் ஆகியோர் மீது மகராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனம் (எம்எஸ்இடிசிஎல்) கடந்த 2008-ம் ஆண்டு மின் திருட்டு வழக்கு தொடர்ந்தது. இருவருக்கும் சொந்தமான விசைத்தறிக் கூடத்தில் மின்சார மீட்டரைச் சிதைத்து, 45 சதவீதத்துக்கும் குறைவான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தியதாக மோசடியாகக் கணக்குக் காட்டி வந்தனர்.
இவ்வகையில் அரசுக்கு சுமார் ரூ. 20 லட்சம் இழப்பு ஏற்படுத்தி யதாகப் புகார் கூறப்பட்டது.
இவ்வழக்கு, ஐசல்கராஞ்சி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதில், எம்.எல்.ஏ. சுரேஷ் ஹல்வான்கர் மற்றும் அவரது சகோதரர் மகாதேவ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஷகாபுர் தீர்ப்பளித்தார்.
இருப்பினும், குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் இந்த தீர்ப்பை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும் அவர் உத்தர விட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை பெற்ற எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வின் பதவி பறிபோகும் என்பதால், சுரேஷின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.