குழந்தைகளை கான்வென்ட் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்திப் பேசிய கோவா அமைச்சர் தீபக் தவாலிகரின் மனைவி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அமைச்சர் தீபக் தவாலிகரின் மனைவரி லதா. இவர் சனாதன் சவுன்ஸ்தா என்ற வலதுசாரி இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை மர்கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "பெற்றோர்களே குழந்தைகளை கான்வென்ட் பள்ளிகளுக்கு அனுப்பாதீர். பெண்களே நீங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள்.
இந்து சமய ஆண்கள் வெளியில் செல்லும்போது தவறாமல் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும். பெண்கள் குங்குமம் வைக்க வேண்டும். குடி பட்வாவை புதுவருடப் பிறப்பாக கொண்டாடுங்கள்.
ஜனவரி 1 நமது புத்தாண்டு அல்ல. தொலைபேசி அழைப்பை ஏற்கும்போது 'ஹலோ' சொல்வதற்கு பதிலாக 'நமஸ்கார்' சொல்லுங்கள்.
நமது கலாச்சாரத்தில், பாரம்பரியத்தில் பெருமை தேடும் காலம் நெருங்கிவிட்டது.
நவநாகரிக பெண்கள் குங்குமம் இட்டுக்கொள்வதை தவிர்க்கின்றனர். இறுக்கமாக, அங்க அவயங்கள் தெரியுமாறு உடையை அணிகின்றனர். தலைமுடியை சிறிதாக வெட்டிக் கொள்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் சிகை அலங்காரம் கோரமாக இருக்கிறது.
மேற்கத்திய கலாச்சாரத்தை இளம் பெண்கள் பின்பற்ற அதிகரித்ததன் பின்னரே பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துள்ளன" என்று அவர் பேசியுள்ளார்.
இது குறித்து அமைச்சரிடம் விளக்கம் கேட்டபோது, "என் மனைவி என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது; உங்களை பின்னர் தொடர்பு கொள்கிறேன்" என கூறினார்.