இந்தியா

அனந்த்குமார், நிலகேனிக்கு எதிராக தமிழர் ரூத் மனோரமா: தேவகவுடாவின் கட்சி சார்பாக களமிறங்குகிறார்

இரா.வினோத்

மக்களவைத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் அனந்த் குமாரையும், காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் ஆதார் அட்டைதிட்டத்தின் முன்னாள் இயக்குநரான நந்தன் நிலகேனியையும் எதிர்த்து சமூக போராளியான ரூத் மனோரமா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.

இருமுக்கிய வேட்பாளர்களையும் வீழ்த்துவதற்காக களத்தில் குதித்திருக்கும் ரூத் மனோரமா ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க.வின் சார்பாக அந்த தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற கட்சியின் தேசிய செயலாளர் அனந்தகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸின் சார்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குநரும் ஆதார் அட்டை திட்டத்தின் முன்னாள் இயக்குநருமான நந்தன் நிலகேனி போட்டியிடுகிறார்.

நந்தன் நிலகேனியும் அனந்த் குமாரும் பெங்களூர் தெற்கு தொகுதியில் நேரடியாக மோது வதால் அந்த தொகுதியின் தேர்தல் முடிவை ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர் பார்க்கிறது.

களத்தில் மனிதநேயப் போராளி

இருவரையும் எதிர்த்துப் போட்டி யிட பிரபல சமூக சேவகியும் பெண்ணிய செயற்பாட்டாளரு மான ரூத் மனோரமாவை மதச் சார்பற்ற ஜனதா தள வேட்பாளராக முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பாக களமிறங்கி இருக்கும் தமிழரான ரூத் மனோரமா சென்னையில் பிறந்து வளர்ந்து பல்வேறு சமூக பணி களில் ஈடுபட்டார். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்க ளூரில் வந்து குடியேறினார். அதன்பிறகு,பெங்களூரில் 'பெண்களின் குரல்'(வுமன் வாய்ஸ்), அமைப்புசாரா தொழி லாளர், கட்டிட தொழிலாளர் உள் ளிட்ட பல அமைப்புகளை கட்ட மைத்து அம்மக்களின் பிரச்சினை களுக்காக தொடர்ந்து போராடி னார். மத்திய,மாநில அரசுகளிடம் மல்லுக்கட்டி பல்வேறு நலத்திட்டங் களையும் பெற்று தந்திருக்கிறார்.

கடந்த 3 தலைமுறைகளாக பெண் உரிமைக்காகவும் ஒடுக் கப்பட்ட,சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்காக வும் ஓயாது போராடி வருகிறார். சமூகத்தின் பகட்டான முகத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் விளிம்பு நிலை மனிதர்களான‌ தலித்துக் களின் வலியை உலக அரங்கில் ஒலிக்க செய்தார். இதனால் 2005-ம் ஆண்டிற்கான‌ 'மாற்று நோபல் பரிசு' ரூத் மனோரமாவிற்கு வழங்கப்பட்டது.

மக்கள் என் பக்கம்

அனந்த்குமார், நந்தன் நிலகேனிக்கு எதிராக பெங்களூர் தெற்கு தொகுதியில் தைரியமாக களமிறங்கும் தமிழரான‌ ரூத் மனோரமாவை, ‘தி இந்து' சார்பாக சந்தித்தோம். ‘‘பெங்களூர் தெற்கு தொகுதி மட்டுமில்லாமல் பெங்களூரில் இருக்கும் ஒவ் வொரு தெருவிலும் இறங்கி மக்களுக்காக போராடி இருக் கிறேன். அதனால் அரசியல், கட்சி, கொடி ஆகிய‌ எல்லைகளை தாண்டி, ஒவ்வொருவரும் என்னை அவர்களுடைய சொந்தமாக நினைக்கிறார்கள். எனவே யாரை எதிர்த்து போட்டியிடுகிறேன் என கவலைப்படவில்லை.

என்னுடைய போட்டி வேட்பாளர்களாக நந்தன் நிலகேனியும் அனந்த் குமாரும் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் ஒருவர் அரசியல் அனுபவம் இல்லாத கார்ப்பரேட்.இன்னொருவர் மக்களுக்கு எதிரான மதவாத அரசியல் செய்பவர். இருவருமே மேல்தட்டு மக்களிடம் கூட சென்றடையாத வேட்பாளர்கள். அதனால் கடுமையாக உழைத்தால் நிச்சயம் மக்களும் வெற்றியும் என் பக்கம்''என்றார்.

SCROLL FOR NEXT