இந்தியா

‘சத்’ பூஜை பிரசாதத்தை சாப்பிட்டதால் தாய் அடித்து 4 வயது மகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சமஸ்திபூர்: பிஹாரில் சத் பூஜைக்காக தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை பூஜை செய்வதற்கு முன்பாக சாப்பிட்டதால் தாய் கொடுரமாக தாக்கியதில் 4 வயது மகள் உயிரிழந்தார். இது தொடர்பாக தாயை போலீஸார் கைது செய்தனர்.

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளின் நலன், செழிப்பு, நீண்ட ஆயுள் வேண்டி சூரிய பகவானை வழிபடும் ‘சத்’ பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். பிஹார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் சத் பூஜைக்கான ஏற்பாடுகளில் ரீனா குமாரி என்பவரது குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். குடும்ப உறுப்பினர்கள் பூஜைக்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தனர்.

அப்போது ரீனா குமாரி வீட்டில் பூஜையின்போது பிரசாதமாக படைப்பதற்கான உணவுப் பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது 4 வயது மகள் சுஹானி, படையலுக்காக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள் ஒன்றை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரீனா, சுஹானியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ரீனா, தனது மகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சுஹானியின் தந்தை ராஜு பாஸ்வான் கூறும்போது, ‘‘மகளின் மரணம் தங்கள் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது. மகள் இல்லாத நிலையில் தனக்கு இனி சத் பூஜை ஒரு பொருட்டல்ல. மனைவி ரீனா குமாரிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார். ரீனா குமாரியை போலீஸார் கைது செய்தனர். இ்ச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT