இம்பால்: மணிப்பூரில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 2023-ல் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இயல்புநிலை இன்னும் முழுமையாகத் திரும்பாத சூழலில், இரு சமூகத்தினரிடையே தொடர்ந்து மோதல்போக்கு நீடிக்கிறது.
இந்நிலையில், மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிலோங் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் மதியம் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் பலர் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (உபா), ஆயுதச் சட்டத்தின் கீழ் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக தெரிவித்த போலீஸார், அவர்கள் மியான்மரைத் தளமாகக் கொண்ட கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு மணிப்பூர் முதல்வர் யும்னாம் கேம்சந்த் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்தார். இதனிடையே, இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாங்ஹ்குல் நாகா லாங் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செப்.25 காலை 7 மணி முதல் 26 காலை 7 மணி வரை 24 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.