சூரத்: குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், சகல வசதிகளையும் கைவிட்டு சமணத் துறவறம் (தீட்சை) ஏற்க உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஸ்வந்த்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப் பாய் போகர் (47). இவர் இளம் வயதில் பிழைப்புக்காக குஜராத் மாநிலம் சூரத் நகருக்குக் குடிபெயர்ந்தார்.
அங்கு சிறிய ஜவுளிக்கடையுடன் தொழிலைத் தொடங்கிய அவர், கடின உழைப்பால் மூன்று கடைகள் மற்றும் பல இயந்திரங்களுடன் ஆண்டுக்கு சுமார் ரூ.15 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்குத் தனது தொழிலை விரிவுபடுத்தினார். சமணமதத் தலைவர் (ஆச்சாரியார்) ஒருவரை திலீப் பாய் சந்தித்தார். இது அவருக்கு சமண சமயத்தின் மீதான ஆர்வத்தை ஆழப்படுத்தியது. அவரது மனைவி, 3 மகள்களும் இதில் ஆர்வம் வளர்த்தனர். கடந்த 2023-ம் ஆண்டு, திலீப் பாயின் மூத்த மகள் ஷைலி சமணத் துறவறம் ஏற்று ‘சாத்வி தர்ஷிதா’ என்ற பெயரைப் பெற்றார்.
மகளின் இந்த முடிவு குடும்பத்தினர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திலீப் பாய் ஜவுளித் தொழிலை கைவிடத் தொடங்கினார். சமணத் துறவறம் ஏற்கவும் தயாரானார். அவருடன் இணைந்து அவரது மனைவி ஜோதி பென் (45) மற்றும் இளைய மகள்களான சவி (22), சார்வி (14) ஆகியோரும் துறவறம் ஏற்க முடிவு செய்தனர். இதற்காக, கிராபிக் டிசைனில் பி.பி.ஏ. பட்டம் பெற்று கைவினைப் பொருள் தொழில் செய்து வந்த சவி தனது தொழிலைக் கைவிட்டார். மாவட்ட அளவிலான கால்பந்து வீராங்கனையான சார்வி, 9-ம் வகுப்புப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார்.
தற்போது இவர்கள் 4 பேரும் சமணத் துறவிகளுடன் இணைந்து தங்கி, கடுமையான துறவற வாழ்க்கை முறைகளுக்குத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். காலணிகள் அணியாமல் வெறுங்காலுடன் நடப்பது, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, 2027-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி சூரத் நகரில் நடைபெறும் விழாவில் இவர்கள் 4 பேரும் முறைப்படி சமணத் துறவறம் ஏற்க உள்ளனர்.