பாட்னா: பிஹார் மாநில எம்எல்ஏ.வின் இல்லத் திருமண விழா சர்வதேச ஊடகங்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பிஹார் மாநிலம் மோகாமா தொகுதி எம்எல்ஏ அனந்த் சிங்கின் இளைய மகள் ஷிவாங்கியின் திருமணம், பாட்னாவில் உள்ள அவரது பூர்வீக கிராமமான நட்வானில் 5 நாட்கள் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான பிஹாரில், பல கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஒரு மக்கள் பிரதிநிதி நடத்திய இந்த ஆடம்பரத் திருமணம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த நவம்பர் 25-ம் தேதி நடைபெற்ற ஷிவாங்கி - ரிஷிகேஷ் குமார் திருமண விழாவில் லட்சக்கணக்கான விருந்தினர்கள், குதிரைப் பந்தயம், பிரம்மாண்ட விருந்து, சொகுசு கார்கள், ஹெலிபேடுகள் எனத் திருவிழா கோலம் பூண்டிருந்தது.
இந்த ஆடம்பரத் திருமணம் ‘அரச குடும்பத் திருமணம்’ என வர்ணிக்கப்படுகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலத்தில் 4,00,000 விருந்தினர்களுக்கு விருந்தளித்த அரசியல்வாதி என்ற தலைப்பிலும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 6.2 ஏக்கர் பரப்பளவில் ஜெய்ப்பூர் அரண்மனை பாணியிலான பந்தல், பிரம்மாண்ட மேடை மற்றும் வெளிநாட்டு மலர்களால் விழா அரங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 5 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
500 சமையல்காரர்கள், 300-க்கும் மேற்பட்ட சமையல் கூடங்களில் 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தயாரித்திருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் உணவுப் பரிமாற்றத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டது. பிஹார், உ.பி. ராஜஸ்தான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்ற பந்தயத்தில் முதல் பரிசாக ‘தார்’ ஜீப்பும், அடுத்தடுத்த பரிசுகளாக பைக் மற்றும் ஸ்கூட்டரும் அறிவிக்கப்பட்டன.