இந்தியா

பிஹாரில் விஷம் அருந்திய 4 சிறுமிகள் உயிரிழப்பு

Ellusamy Karthik

பாட்னா: பிஹாரில் அவுரங்காபாத் மாவட்டம், மோட்டி பிஹா என்ற கிராமத்தில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகள் அண்மையில் வயல்வெளிக்கு சென்றனர். இவர்களில் 14 வயது சிறுமி மட்டும் பதைபதைக்க வீட்டுக்கு ஓடி வந்தார். அவர் கூறியதை கேட்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஹெரான் எனும் பறவையை கொல்ல பயன்படுத்தும் விஷத்தை பரிசோதனை முயற்சியாக அருந்தியதில் 4 தோழிகளும் தனது கண் முன்னே சரிந்து விழுந்ததாகவும் தான் மட்டும் கொஞ்சமாக குடித்துப் பார்த்து பிறகு துப்பிவிட்டதாகவும் அச்சிறுமி கூறினார்.

          

இதையடுத்து கிராம மக்கள் வயல்வெளிக்கு ஓடிச் சென்றபோது, 4 சிறுமிகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் வீடு திரும்பிய சிறுமியை காப்பாற்றும் முயற்சியாக அவருக்கு வாந்தியை வரவழைக்க வேப்பிலை சாறு கொடுத்தனர்.

இதில் உயிர் தப்பிய சிறுமி கூறுகையில், “அதை (விஷத்தை) சாப்பிட்ட பிறகு நாம் வாழ்கிறோமா அல்லது இறக்கிறோமா என்று பார்க்கலாம் என்று தோழி ஒருவர் கூறினார். இதையடுத்து தண்ணீரில் கலந்து அதை குடித்தோம். எனக்கு குறைவாகவே இருந்தது. ஆனாலும் அதை துப்பிவிட்டேன்’’ என்றார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT