ரோத்தக்: ஹரியானா மாநிலத்தில் பிரபல ரவுடிகளான அங்கித் பாபா மற்றும் ஹிமான்ஷு பாவ் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. அங்கித் பாபாவின் சகோதரரான சன்னி ரிடோலியா, தற்போது பாபா கும்பலை வழிநடத்தி வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லியைச் சேர்ந்த ஜான்வி சவுத்ரி என்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு, மற்றொரு கும்பலுடன் ஏற்பட்ட பகை காரணமாக, ஜான்வி, பாவ் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பிரதிபலனாக, ஜான்வி மூலம் பாபா கும்பலை பழிவாங்க, பாவ் கும்பல் திட்டமிட்டது. இதையடுத்து, சன்னியை கடந்த 25-ம் தேதி இரவு ஹரியானாவின் ரோத்தக்கில் உள்ள மில்டன் ஓட்டலுக்கு ஜான்வி அழைத்து வந்தார். பின்னர், அந்த ஓட்டலின் இருப்பிடத்தை பாவ் கும்பலுக்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சன்னி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
இன்ஸ்டாகிராம் மூலம் ஜான்விக்கு, சன்னியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக இருவரும் தொடர்ந்து பேசி வந்ததுடன், நேரிலும் சந்தித்து வந்துள்ளனர். சன்னியின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவே ஜான்வி அவருடன் நெருக்கமாகப் பழகி உள்ளார். சன்னி எப்போதும் குண்டு துளைக்காத காரில் பயணித்து வந்ததால், அவரை நேரடியாகக் குறிவைத்துத் தாக்குவது சிரமமாக இருந்ததால், ஓட்டலுக்குள் அழைத்துச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு முடிந்ததும் ஜான்வி அங்கிருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் தப்பிச் சென்று விட்டது தெரிய வந்தது. இந்தச் சதித்திட்டத்துக்கு உதவியதற்குப் பிரதிபலனாக, ஜான்வியை வெளிநாட்டில் குடியேறச் செய்ய, ஹிமான்ஷு பாவ் கும்பல் உதவி செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது. இவ்வாறு போலீஸார் கூறினர்.