நிலநடுக்கத்தால் காயமடைந்து தர்பங்கா மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் (டிஎம்சிஎச்) சிகிச்சை பெற்று வருபவர்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டியதாக புகார் எழுந்ததையடுத்து, இதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிஹார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் காயமடைந்து, டிஎம்சிஎச் மருத்துவ மனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் நெற்றியில், அடையாளம் காண்பதற்காக ‘நிலநடுக்கம்’ என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அந்த ஸ்டிக்கர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுசில் குமார் மோடி கூறும்போது, “நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் நெற்றியில் சிறைக்கைதிகள் போல ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அவர்களை அவமதிக்கும் செயல்” என்றார்.
இதையடுத்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தர்பங்கா மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் வைத்யநாத் சஹானி, டிஎம்சிஎச் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.
இந்த சம்பவத்துக்கு டிஎம்சிஎச் கண்காணிப்பாளர் ஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள மேற்கு சம்பரன், சித்தமர்ஹி உள்ளிட்ட மாவட்டங் களில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று ஆய்வு செய்தார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்காக உணவுப் பொருட்களை சுகாதார முறையில் தாயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிஹாரில் மட்டும் நிலநடுக்கத்துக்கு இதுவரை 58 பேர் பலியாகி உள்ளனர்.