இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடனான பேச்சுவார்த்தையின்போது, அவருடன் வர்த்தக விவகாரங்கள் குறித்து நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாட்டின் புதிய பிரதமராக இன்று மாலை 6 மணிக்கு மோடி பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், நரேந்திர மோடி நாளை சார்க் நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.
நரேந்திர மோடியுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேற்கொள்ளும் ஆலோசனை கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்படும். இதுவே இரு தரப்பிலும் தற்போதைய முக்கிய பிரச்சினையாக இருப்பதாகவும், இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையிலிருந்து தமது வர்த்தகத்திற்காக வரக் கூடாத பொருட்கள் என்ற பட்டியலில் 1,209 பொருட்களை பாகிஸ்தான் அரசு வகுத்துள்ளது. இரு நாட்டு எல்லையிலும் சில காலமாக நிகழும் மோதல் போக்கு காரணமாக, கடந்த வருடம் இது தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மோடி பதவியேற்பு விழாவிற்காக டெல்லி வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே வர்த்தக உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.