டிப்தீரியா, ஹெபடைட்டிஸ்-பி, சிற்றம்மை, புட்டாளம்மை, மற்றும் டெட்டனஸ் நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் இல்லாமல் உலகம் நெடுகிலும் சுமார் 2 கோடியே 20 லட்சம் குழந்தைகள் அவதிப்படுவதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதில் சுமார் 90 லட்சம் குழந்தைகள் தென்கிழக்கு ஆசியப் பகுதியைச் சேர்ந்தவை என்று உலக சுகாதார மைய பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் புதுடெல்லியில் இன்று தெரிவித்தார்.
ஏப்ரல் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை உலக நோய் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து பூனம் கேத்ரபால் கூறியதாவது:
தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஆண்டு ஒன்றிற்கு 4 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 75% குழந்தைகளுக்குத்தான் 3 நோய்த்தடுப்பூசி மருந்துகள் கிடைக்கின்றன. மீதி குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
2013-,ம் ஆண்டு அம்மை நோய்க்கு பலியானவர்களில் 26% தென் கிழக்கு ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள். சுமார் 38,000 குழந்தைகள்அம்மைக்கு பலியாகியுள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 27,500 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
குழந்தைகள் உயிரைக் காக்கும் அடிப்படை வாக்சைன்களை கைவசம் வைத்திருக்கும் அரசின் நடவடிக்கையை இந்த இருண்ட புள்ளிவிவரங்கள் மேலும் வலியுறுத்துகின்றன. போலியோவை ஒழித்த நடவடிக்கைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே தடுப்பூசி மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதான திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் மேலும் பரவலாக்கப்படுவது அவசியம். எனவே மருத்துவ நிறுவனங்கள், அரசுகள், சிவில் சமூகம் என்று அனைவரும் இதற்காகப் பாடுபடுவது அவசியம். வாக்சைன்கள் இருப்பு குறித்த மோசமான நிர்வாகமே இத்தகைய நிலைக்குக் காரணம்” இவ்வாறு கூறினார் இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங்.