தனது பிரதமர் வேட்பாளரை பாஜக மாற்றினாலும், மீண்டும் அதனுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
பாஜக தன் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடிக்குப் பதிலாக தேர்தலுக்குப் பிறகு அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் என வேறு யாரை மாற்றி அறிவித்தாலும், தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணையாது.
கடந்த 2013- ஜூனில் மோடிக்குப் பதிலாக வேறுயாரையாவது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி னால், கூட்டணியில் இணைவது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் பரிசீலிக்கும் எனச் சொன்னோம். ஆனால், அப்போதைய சூழல் வேறு. மோடி மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலானவர். ஆனால், ராகுல் அப்படி அல்ல. அவர் மதச்சார்பற்றவர் என்பது மட்டு மல்ல, அமைதியானவரும் கூட என்றார்.
பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தது தேர்தலில் கூட்டணிப் பங்கீட்டை இறுதி செய்யவா எனக் கேட்டபோது, “இதை நான் மறுக்கவோ, ஆமோதிக்கவோ போவதில்லை. பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து தரும்வரை காங்கிரஸுடன் கூட்டணி பற்றிப் பேசப்போவதில்லை. ஆனால், தற்போது காலம் கடந்து விட்டது” என்றார்.