இந்தியா

டைம் பத்திரிகையின் உலகின் 100 செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில் மோடி, கேஜ்ரிவால்

பிடிஐ

டைம் பத்திரிகை வெளியிடும் சர்வதேச அளவிலான 'செல்வாக்கு மிகுந்த' 100 பேர் கொண்ட பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றனர்.

உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலை நியூயார்க்கிலிருந்து வெளியாகும் டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் இணையதளத்தின் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவில் இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜிரிவால் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு 0.6 சதவீத ஆதரவு வாக்குகளும் 34 சதவீத எதிர்ப்பு வாக்குகளும் பதிவாகின. பிரதமர் மோடியை வெகுஜனத் தலைவர் என்றும், கடந்த ஆண்டில் ஆட்சியைப் பிடித்து குறைந்த நேரத்தில் அமெரிக்காவுடனான உறவுக்கு புத்துயிரூட்டு இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வழி வகுத்ததாக பாராட்டியுள்ளது.

டெல்லியில் 2-வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 0.5 சதவீத ஆதரவு வாக்குகளும் 71 சதவீத எதிர்ப்பு வாக்குகளும் பதிவாகின. 2013-ல் முதல்வராகி மிக குறைந்த காலம் பதவியிலிருந்து விட்டு விலகி, பின்னர் அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் விளைவுகளையும் தாண்டி இந்தியாவின் மிகப் பெரிய தேசிய கட்சிகளை வீழ்த்தி வெற்றி பெற்றதாக டைம் பத்திரிகை அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பாராட்டு தெரிவித்தது.

இவர்களைத் தவிர இந்தப் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ராப் இசைப் பாடகிகள் லேடி காகா, ரிஹானா, டெய்லர் ஸ்விஃப்ட், அமெரிக்க அதிபர் ஒபாமா, 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன், தலாய் லாமா, எம்மா வாட்சன், மலாலா, சீன அதிபர் ஜீ ஜிங்பிங், ஃபேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் கும் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT