காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் குழு நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணைகள் கட்டி, கூட்டுக் குடிநீர் மற்றும் நீர்மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கி, திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.
கர்நாடக அரசின் இந்த திட்டத்தை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடுமையாக எதிர்த்து முழு அடைப்பு போராட் டம் நடத்தின. மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்ற கர்நாட கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினர். இதனை கண்டித்து கடந்த 18-ம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெற்றது.
இதையடுத்து கர்நாடக அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித் தார். ஆனால் பல்வேறு பணிகளின் காரணமாக மோடி, கர்நாடக அரசு பிரதிநிதிகளை சந்திக்க மறுத்தார். இந்நிலையில்நேற்று முன்தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையிலான தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக மீண்டும் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால், மத்தியில் உள்ள பாஜக அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது என கர்நாடக காங்கிரஸார் குற்றம்சாட்டினர். இந்நிலையில் கர்நாடக அனைத் துக்கட்சி பிரதிநிதிகள் குழுவை பிரதமர் மோடி உடனடியாக சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் கூறியதாவது:
“மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசியதை பத்திரிகையில் படித்தேன். எனவே கர்நாடக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்குமாறு கேட்டு கொண்டோம். இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக் கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துக்கட்சி குழு தலைவர்களும் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம். அப்போது மேகேதாட்டு குறித்து உண்மை நிலவரங்களை எடுத்துரைத்து அணை கட்டுவதற்கு அனுமதி பெறப்படும்'' என்றார்.