சத்தீஸ்கரில் பஸ்தார் பகுதியில் பணியாற்றும் கீழ்நிலை போலீஸார்கள் 'வேலையை விட்டுச் செல்ல வேண்டும் இல்லையேல் உயிரை விடவேண்டும்' என்று மாவோயிஸ்ட்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி பஸ்தார் பகுதியில் பணியாற்றிய வீர வசந்த் என்ற கான்ஸ்டபிளை கடத்திச் சென்ற மாவோயிஸ்ட்கள் அவரை கொலை செய்தனர். இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட மாவோயிஸ்ட் அமைப்பு, இவரது கொலை, உள்ளூர் போலீஸார்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து மேற்கு பஸ்தார் மாவோயிஸ்ட் அமைப்பு டிவிஷனல் கமிட்டி செயலர் மாதவி அளித்த செய்தியாளர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மாநில அரசு எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. மாறாக பள்ளி மாணவர்களை வைத்து மவுன் ஊர்வலம் நடத்தினர். எங்கள் கட்சிக் கொள்கையின் படி ஆயுதமற்ற எவரையும் கொலை செய்யும் வழக்கமில்லை. நாங்கள் இப்படி நிறைய ஜவான்கள், போலீஸாரை விடுவித்திருக்கிறோம்.
ஆனால், உள்ளூர் மக்கள் மீது தெரிந்தே அராஜகங்களை செய்பவர்களை நாங்கள் விட்டுவிட மாட்டோம். வீர வசந்த் அப்படிப்பட்ட ஒரு போலீஸ்காரர்தான்.
மக்கள் இயக்கத்துக்கு எதிராக அந்த போலீஸ் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். பல போலி என்கவுண்டர்களை நடத்தியுள்ளார், கிராம மக்களை துன்புறுத்தி பிஜப்பூர் பழங்குடி மக்களை தாக்கியிருக்கிறார், அவர்களிடமிருந்து பணத்தையும் பிடுங்கிச் சென்றுள்ளார்.
மேலும் போலீஸார் கூறுவது போல் அவர் தன் குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்லவில்லை, அவாப்பள்ளி பகுதியில் எங்களைப் பற்றிய துப்புத் தகவல் சேகரிக்க வந்து விட்டு பிஜப்பூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகத் தெரியும் இவரைப் போன்ற மக்கள் விரோதியை நாங்கள் விட்டுவிட முடியாது.
வீர வசந்த் கொலை பஸ்தார் பகுதியில் மற்ற கீழ்நிலை போலீஸார்களுக்கு ஒரு எச்சரிக்கை. பழங்குடியினரின் நிலத்தை அபகரிக்கும் கார்ப்பரேட்களுக்கு பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். பஸ்தாரில் இருக்க வேண்டுமென்றால் போலீஸ் வேலையைத் தவிர வேறு வேலையைப் பார்க்கவும். இல்லையெனில் எங்கள் கையில் உயிரை விட தயாராக இருக்கவும்" என்று கூறப்பட்டுள்ளது.