இந்தியா

அதிகரிக்கும் உட்பூசல்: ஆம் ஆத்மியைக் கேள்வி கேட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் நீக்கம்

பிடிஐ

ஆம் ஆத்மியில் இருந்து எல்.ராமதாஸ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய, தேசிய செயற்குழு உறுப்பினர் ராகேஷ் சின்ஹா, விஷால் சர்மா ஆகியோர் தற்காலிகமாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இது ஆம் ஆத்மி தலைமையிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்றார். அதன்பின், உட்கட்சி பூசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, ஆம் ஆத்மியின் லோக்பால் அட்மிரல் எல்.ராமதாஸ் நீக்கப்பட்டார். மேலும், கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து பிரசாந்த் பூஷன் நீக்கப்பட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் இந்த நடவடிக்கைகள் குறித்து, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி தேசிய செயற்குழு உறுப்பினர் ராகேஷ் சின்ஹா கேள்வி எழுப்பினார். ‘‘கட்சியின் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்து அவசர அவசரமாக ராமதாஸ், பிரசாந்த் பூஷனை நீக்கி உள்ளனர். தேசிய செயற்குழு உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமல், கட்சி தலைமை இந்த முடிவெடுத்துள்ளது’’ என்று ராகேஷ் விமர்சனம் செய்தார். இதையடுத்து அவரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உள்ளனர்.

இதற்கிடையில், ‘‘கடந்த மாதம் 28-ம் தேதி தேசிய செயற்குழுவில் இருந்து யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதன்பின் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்தக் கூட்டத்தில் ராகேஷ், உ.பி.யைச் சேர்ந்த மற்றொரு தேசிய உறுப்பினர் விஷால் லதே இருவரும் கலந்து கொண்டனர். அதற்காக இருவரையும் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி வைத்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்று ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக ஆம் ஆத்மி தலைவர் கிறிஸ்டினா சாமி தனது பதவியை நேற்றுமுன்தினம் ராஜினாமா செய்தார்.

SCROLL FOR NEXT