இணைய சமவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
பூஜ்ஜிய நேரத்தின்போது அவையில் பேசிய ராகுல் காந்தி, "மத்திய அரசு இணைய சுதந்திரத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்ப் பார்க்கிறது. சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள முயற்சிக்கிறது.
எனவே, இணைய சமவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தற்போது இருக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் இல்லையேல் புதிய சட்டத்தையே கொண்டு வரலாம். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இணையத்தை கையாள்வதில் சம உரிமை நிலவ வேண்டும்" என்றார்.
ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் பாஜகவினர் குரல் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இணைய சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. பிரதமர் மோடி, தேசத்தில் உள்ள 125 கோடி மக்களுக்கும் இணைய பயன்பாட்டு வசதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டது" என்றார்.
முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி நேரத்தின்போது இதேவிவகாரத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜேஷ் பேசினார். அப்போது அவர், "டிராய், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது" எனக் கூறினார்.
இணைய சமவாய்ப்பு குறித்து அவையில் முறையான விவாதம் தேவை என பல்வேறு எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "இப்பிரச்சினை குறித்து அரை மணி நேரம் விவாதம் நடத்த அனுமதிக்கலாம். அதற்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இணைய சமவாய்ப்பு பிரச்சினை குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக விவாதிக்க அனுமதி கோரி மக்களவையில் ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டு என்ன?
இப்போது இணையத்தில் விரும்பும் தகவலைப் பெறுவதற்கும், விரும்பும் இணையப் பக்கத்தை பார்ப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு சமவாய்ப்பு இருக்கிறது. இதனை மாற்றி பணம் படைத்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக் கேட்புக்கான வரைவு அறிக்கை வெளியிட்டது.
இதன் மூலம் சில இணையப் பக்கங்களை மட்டுமே பார்க்கச் செய்தல், சில இணையப் பக்கங்களை மட்டுமே வேகமாக அளித்தல், சில இணையப் பக்கங்களுக்கு கட்டணம் விதித்தல் - என்கிற புதிய நடைமுறையைத் திணிக்க டிராய் அமைப்பு முயற்சிக்கிறது. செல்பேசிகளில் இயங்கும் செயலிகளில் (App) சிலவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க முயற்சிக்கிறது.
எதிர்காலத்தில் மொபைல் போன்கள் வழியாகவே மிக அதிக அளவில் இணையம் பயன்படுத்தப்படும் என்பதால், மொபைல் வழியாக வழங்கப்படும் சேவைகளில் இந்த விதிமுறைகளைத் திணிக்க டிராய் முயற்சிக்கிறது என்பதே பல்வேறு தரப்பினரும் வைக்கும் குற்றச்சாட்டு.