மகாராஷ்டிர திரையரங்குகளில் மராத்திய மொழி படங்களை வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற மாநில அரசின் யோசனைக்கு எதிராக கருத்து தெரிவித்த பெண் எழுத்தாளர் ஷோபா டேவின் வீட்டை சிவசேனா மோர்ச்சா அமைப்பு முற்றுகையிட்டது.
மகாராஷ்டிரத்தில் உள்ள திரையரங்குகளில், அதிகபட்ச பார்வையாளர்கள் வரும் அந்த 'ப்ரைம் டைம்' (மாலை/முன்னிரவு நேரக் காட்சிகள்) நேரத்தை தேர்ந்தெடுத்து தினசரியளவில் கட்டாயமாக மராத்திய மொழிப் படங்களை திரையிட வேண்டும் என்ற புதிய விதியை அம்மாநில அரசு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரபல மராத்திய பெண் எழுத்தாளர் ஷோபா டே, "எனக்கு மராத்திய மொழிப் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் தேவேந்திர பட்நாவிஸ், எந்த நேரத்தில் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன். இது அடாவடித்தனம்.
திரையரங்குகளில் பாப் கார்ன்களுக்கு பதிலாக மராத்திய உணவான சேவை போன்ற உணவை மட்டுமே உண்ண கூறிவிடுவீர்கள் போல" என்று கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிர முதல்வரை குறிப்பிட்ட அவரது கருத்து மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகராஷ்டிராவில் பாஜக-வுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா, மாநில சட்டபேரவையில் ஷோபா டேக்கு எதிராக உரிமை மீறில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தியது.
அதுமட்டுமல்லாமல் ஷோபா டேயை குறிப்பிட்டு, "நீங்கள் மராத்திய எழுத்துலகத்துக்கு நிறைய படைப்புகளை அளித்துள்ளீர்கள். ஆனால் மராத்தியர்களுக்கு எதிராக அந்தச் சமூகத்தில் பிறந்த பெண்ணே ஏற்கத்தகாத கருத்து கூறி இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
நீங்கள் மராத்திய பாரம்பரிய உணவுகளை அவமதித்து நமது மக்களையும் அவமதித்துவிட்டீர்கள்" என்று சிவ சேனாவின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டது.
மராத்திய மக்களின் உணவை குறிப்பிட்டு கருத்து தெரிவித்த பெண் எழுத்தாளர் ஷோபா டேவை எதிர்த்து சிவசேனா மோர்ச்சா ஆதரவாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த ஷோபா, "உரிமை மீறல் தீர்மானத்தை நிறைவேற்றி என்னை மன்னிப்பு கோர வைக்க வேண்டும் என்பது இவர்களது எண்ணம். இவர்களது முற்றுகையால் நான் பாதிக்கப்படவில்லை. எனது வீட்டுக்கு பாதுகாப்பு அளித்து வரும் மும்பை போலீஸுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.