'தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாட்டு மக்களுக்கு நல்ல நாள் வந்துவிட்டதாக கூறிய பிரதமர் மோடி, தற்போது விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து, நாட்டை வீழ்ச்சியடைய வைத்துவிட்டார்" என்று மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சீற்றமாக பேசினார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி இன்று தொடங்கியது. இதில் சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் தாக்கல் ஆனது.
விடுப்பு முடிந்து கூட்டத் தொடரில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதா மற்றும் அதனை சார்ந்த விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து மக்களவையில் பேசினார்.
அவர் பேசும்போது "இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள்தான். அவர்களால் மட்டுமே இந்த நாடு உருவாகி நிற்கின்றது. பிரதமர் மோடிக்கு நான் ஒரு யோசனை கூறுகிறேன். அவர் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் சென்று பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிய வேண்டும்.
மாநில அரசுகளுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட காணொலிக் காட்சிக் கூட்டத்தில் 80 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் மாநில அரசுகள் தரும் கணக்குக்கும் மத்திய அரசு அளிக்கும் கணக்குக்குமே வேறுபாடு உள்ளது. அதிகாரிகள் அளிக்கும் கணக்கு முற்றிலும் வேறாக உள்ளது.
அதிகபட்ச விற்பனை விலையில் மாற்றமே இல்லை. விவசாயிகளின் கடன் சுமை குறையவில்லை. விவசாய வளர்ச்சி 1 சதவீதம் மட்டுமே உள்ளது. விவசாயிகள்தான் நாட்டுக்கு முதன்மையானவர்கள். அவர்களுக்கு பிரச்சினை என்றால் எல்லாமே பிரச்சினைதான். விவசாயிகளின் நிலை தற்போது கவலை அளிக்கும் நிலையில் உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்களுக்கு நல்ல நாள் வந்து விட்டதாக கூறினார். சொன்னதை செய்யாமல், நாட்டையே வீழ்ச்சியடைய வைத்துவிட்டார் பிரதமர் மோடி.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாய கடன்கள் 20 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை ஒடுக்கி, அவர்களை பலவீனப்படுத்தி நிலங்களை அபகரிக்க நினைக்கின்றது இந்த அரசு.
விவசாயிகளுக்கு எதிரான நிலச் சட்டத்தை இந்த நாடாளுமன்றம் அனுமதிக்க கூடாது. இதற்கான முயற்சியை இந்த அரசு பின்வாசல் வழியாக செய்து வருகிறது. இதனை அனுமதிக்க கூடாது" என்றார் ராகுல் காந்தி.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பின்னர் முதல் முறையாக எதிர்கட்சியின் சார்பில் ராகுல் காந்தி இன்று குரல் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.