இணைய சமவாய்ப்பு குறித்து காரசார விவாதங்கள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, இணைய சமவாய்ப்பை அனைவருக்கும் வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் இணையம் விரிவடைய தேசத்தின் இளைஞர்கள் பெருமளவில் உதவியுள்ளனர்.
இணைய சமவாய்ப்பை பொருத்தவரை எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் இணைய சேவை கிடைக்க வேண்டும் அதுவும் குறிப்பாக இளைஞர்களுக்கு இணைய சேவை கிடைக்க வேண்டும். அதில் மத்திய அரசு உறுதியுடன் இருக்கிறது.
இந்திய இளைஞர்களின் சமூக வலைத்தள பிரவேசத்தை பிரதமர் மோடியே பெருமளவில் பாராட்டி வருகிறார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்போது, இணைய சமவாய்ப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை மிகவும் கவனமாக கையாண்டு தெளிவான முடிவெடுக்க வேண்டியுள்ளது" என்றார்.