பிஹாரில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி மாலை அணிவித்த லோகியாவின் சிலை கழுவப்பட்டதை தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி நேற்று முன்தினம் மாலை அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சஹர்ஸா நகருக்கு சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் வழியில், சுபுவால் நகரில் உள்ள லோகியா சவுக் என்ற இடத்தில் தொண்டர்களால் நிறுத்தப்பட்டார். மாஞ்சி அங்குள்ள, சோஷலிச தலைவர் ராம் மனோகர் லோகியாவின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்நிலையில் மாஞ்சி அங்கிருந்து சென்ற பிறகு, ஆர்ஜேடி மாணவர் அணியான லோகியா விசார் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த சிலர் லோகியாவின் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவினர். மாஞ்சி அணிவித்த மாலையை எடுத்துவிட்டு புதிய மாலை அணிவித்தனர்.
இந்த விவகாரம் பிஹாரில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுபுவால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் குமார் ராஜ் நேற்று கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் அளித்த அறிக்கை யின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்துள்ளோம். மற்ற 3 பேரை தேடி வருகிறோம்” என்றார்.