இந்தியா

மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்: பிரதமரிடம் கர்நாடக பாஜக எம்பி, எம்எல்ஏக்கள் வேண்டுகோள்

இரா.வினோத்

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத் தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த மூன்று நாட்களாக பெங்களூருவில் தங்கியிருந்தார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு மாநில பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்க‌ளுக்கு மோடி விருந்து அளித்தார். இதில் மத்திய அமைச்சர்கள் அனந்த குமார், சதானந்தகவுடா, பிரகாஷ் ஜவ‌டேகர், வெங்கைய்ய நாயுடு உள் ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அப்போது கர்நாடக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி தலைமையிலான பாஜகவினர், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கர்நாடக அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு புதிய அணைகள் கட்டுவதால், மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய பாஜக அரசின் ஆதரவு, மாநிலத்தில் பாஜகவுக்கு நற்பெயரை ஏற்படுத்தும்” என வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த தகவலை கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, “மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதியைப் பெற கர்நாடக பாஜக உரிய முயற்சி மேற்கொள்ளும். மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படும்” என்றார்.

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ‌டேகரிடம் கேட்டபோது, “கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக அனுமதி கோரி இன்னும் கடிதம் அனுப்பவில்லை. இந்த விவகாரத்தில் இரு மாநில நலனும் கருத்தில் கொள்ளப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT