தகவல் தொடர்பு குறித்து உரை நிகழ்த்த அழைத்துவிட்டு திடீரென நிகழ்ச்சியை ரத்து செய்ததால் விஞ்ஞானி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘தி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்’ (ஐஐஎம்சி) சார்பில் கடந்த 8-ம் தேதி தகவல் தொடர்பு குறித்த கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் உரை நிகழ்த்த விஞ்ஞானி கவுஹார் ரஸாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாக விஞ்ஞானிக்கு நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தைய நாள் 7-ம் தேதி ஐஐஎம்சி தகவல் அனுப்பியது. இதனால் விஞ்ஞானி ரஸா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கம்யூனிகேஷன் அண்ட் இன்பார்மேஷன் ரிசோர்சஸ்’ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரிபவர்தான் கவுஹார் ரஸா. இவர், குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் எடுத்துள்ளார். அது தெரியாமல் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்த ஐஐஎம்சி முதலில் அழைப்பு விடுத்ததாகவும், தகவல் அறிந்தவுடன் ரஸாவின் நிகழ்ச்சியை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஐஐஎம்சி.யில் இந்திய தகவல் சேவைகள் (ஐஐஎஸ்) குரூப் ஏ பிரிவு அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்த ரஸாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஸா கூறும்போது, ‘‘நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தைய நாள் ஐஐஎம்சி நிர்வாகத்தினர் என்னை தொடர்பு கொண்டனர். அப்போது நிகழ்ச்சிக்கு வருவதற்கு கார் அனுப்புவது குறித்து பேசினர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி ரத்தாகி விட்டதாக கூறினர்” என்றார்.
இதுகுறித்து ஐஐஎம்சி இயக்குநர் ஜெனரல் சுனித் தாண்டன் கூறும்போது, ‘‘நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நேரத்தில் என்னால் பங்கேற்க இயலாத நிலை. மேலும், அந்த நேரத்தில் வேறு சில நிகழ்ச்சிகளும் இருந்தன’’ என்றார்.