தெலங்கானா மாநிலத்தில் தீவிர வாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நல்கொண்டா மாவட்டம் சூர்யாபேட்டை பஸ் நிலையத்தில் 2 போலீஸாரை சுட்டுக் கொன்று தப்பித்த சிமி அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த மோதல் சம்பவத்தில் மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பலியானார்.
2 சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்ட ரில் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து தெலங்கானாவில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மேலும் 3 தீவிரவாதிகள் தெலங் கானாவில் பதுங்கி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெலங்கானா மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் ஆயுதப்படை போலீ ஸார், மத்திய ரிசர்வ் படை போலீஸார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனிக் குழுக்கள் நல்கொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தீவிரவாதிகளை தேடி வருகின்றன. இதுதொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரிலிருந்து வந்த தனிப்படை போலீஸார் என் கவுன்ட்டர் நடந்த இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். டெல்லி, மத்தியப் பிரதேச போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து தணிக்கை செய்த பின்னர் கொல்லப்பட்டவர்கள் சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதனால் சம்பவம் நடந்த பகுதிகளில் பஸ் நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், மசூதிகள், வனப்பகுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தெலங்கானாவில் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என மத்திய உள்துறை எச்சரித்திருந்தாலும், 11 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என தெலங்கானா கண்காணிப்பு போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதனால் தலைநகர் ஹைதரா பாத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.