இந்தியா

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் மீண்டும் ஒப்புதல்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

செய்திப்பிரிவு

இரண்டாவது முறையாக பிறப்பிக்கப் பட்ட நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று மீண்டும் ஒப்புதல் அளித்தார்.

இந்த அவசர சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

‘அரசு மற்றும் தனியார் திட்டங் களுக்கு 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலங் களைக் கையகப்படுத்த முடியும். ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த நிலத்தை பயன்படுத்தாவிட்டால் விவசாயி களிடமே திருப்பி அளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் பாஜக பதவியேற்ற பிறகு இந்தப் பிரிவுகளை நீக்கி கடந்த ஆண்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் அவசர சட்டங்களுக்கு நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்படி அவசர சட்டத் துக்கு மாற்றாக நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை.

அவசர சட்டத்தின் கால அவகாசம் நாளை காலாவதியாக உள்ள நிலையில் மீண்டும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை அண்மையில் முடிவு செய்தது.

பொதுவாக அவசர சட்டங்களைப் பிறப்பிக்க நாடாளுமன்றத்தின் ஏதாவது ஓர் அவையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன்படி மாநிலங்களவை அண்மையில் முடித்துக் கொள்ளப் பட்டது. அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர் அந்த அவசர சட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலை யில் இரண்டாவது பாதி ஏப்ரல் 20-ம் தேதி தொடங்குகிறது. இதில் எப்படியாவது நிலம் கையகப்படுத் துதல் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இதற்கான பொறுப்பு மூத்த அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

அவசர சட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஹைதராபாதில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு எதிரானவர். அதனால்தான் நிலம் கையகப் படுத்துதல் மசோதாவை நிறைவேற்ற அவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த மசோதாவை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்.

அண்மைக்காலமாக மத்திய அரசு தன்னிச்சையாக அவசர சட்டங் களைப் பிறப்பிக்கிறது. அந்த சட்டங் களை முதலில் மக்களவையில் நிறை வேற்றுகிறது. ஆனால் மாநிலங்களவை யில் பெரும்பான்மை இல்லாததால் மக்கள் விரோத மசோதாக்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. வேறு வழியின்றி அந்த மசோதாக்களில் திருத்தம் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இது எந்த வகையான ஜனநாயகம் என்பது புரியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 19-ம் தேதி பிரம்மாண்ட விவசாயிகள் பேரணியை நடத்த காங்கிரஸ் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஓய்வில் இருக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இதில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம் மசோதா விவகாரத்தில் ஜனதா கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை ஆரம்பம் முதலே காங்கிரஸுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எனவே ஏப்ரல் 19-ம் தேதி பேரணியில் அந்தக் கட்சிகளும் பங்கேற்கும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT