இந்தியா

வங்கதேசத்துக்கு கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்: ராஜ்நாத்

பிடிஐ

"வங்கேதசத்துக்கு கால்நடைகள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் வங்கதேசத்தவரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிடுவர்" என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பசுவதை தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில தினங்களுக்கு முன்னர் யோசனை தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது வங்கதேசத்துக்கு கால்நடைகள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு கால்நடைகள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் வங்கதேசத்தவரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிடுவர். எல்லையில், கால்நடைகள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே எல்லையில் நிலவும் தீவிர கண்காணிப்பில் கால்நடை கடத்தல் குறைந்துள்ளதாகவும், இதனால் வங்கதேசத்தில் மாட்டிறைச்சி விலை 30% அதிகரித்துள்ளதாகவும் எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினால் வங்கதேசத்தில் மாட்டிறைச்சி விலை 70 முதல் 80% வரை அதிகரிக்கும். இதனால், அங்குள்ளவர்கள் மாட்டிறைச்சி உண்பதையே கைவிட்டுவிடுவார்கள்" என்றார்.

எல்லையில் இந்திய வீரர்கள் மீது வங்கதேச கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், "இதனைத் தடுக்க தெற்கு பெங்கால் எல்லையில் நிலை அமர்த்தப்பட்டிருக்கும் வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும். எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு தொடர்ந்து செய்யும்" என்றார்.

நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை அமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாஜக வலியுறுத்தி வருகிறது என ராஜ்நாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது வங்கதேசத்திலும் மாட்டிறைச்சி உண்பதை குறைப்பதைப் பற்றி அவர் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT