பஸ் நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இரு போலீஸார் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் சூர்யாபேட்டை பஸ் நிலையத்தில் சில திருடர்கள் பஸ்களில் தப்பி செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு இன்ஸ்பெக்டர் மேகுலய்யா, கான்ஸ்டபிள் லிங்கய்யா (36), ஊர் காவல் படை வீரர்கள் மகேஷ் (35), கிஷோர் (34) ஆகியோர் பஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் செல்லும் அரசு பஸ்ஸில் சோதனையிட்டபோது, இரண்டு மர்ம நபர்களை சந்தேகத்தின் பேரில் கீழே இறக்கி விசாரித்தனர்.
அப்போது போலீஸாருக்கும் மர்ம நபர்களுக்குமிடையே வாக்குவாதம் நடந்தது. அந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டனர். இதில் கான்ஸ்டபிள் லிங்கய்யா, ஊர்காவல் படை வீரர் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்ஸ்பெக்டர் மேகுலய்யா, ஊர்காவல் படை வீரர் கிஷோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஹைதராபாத் தேசிய நெடுஞ் சாலையில் தப்பி சென்ற அந்த மர்ம நபர்கள், வழியில் வந்து கொண்டிருந்த கார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரில் இருந்த மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லி கூடம் மண்டலத்தை சேர்ந்த துரைபாபு எனும் மண்டல தலைவருக்கு தோள் பட்டையில் குண்டு பாய்ந்தது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதனால் விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் நல்கொண்டா எஸ்.பி பிரபாகர் ராவ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் நேற்று காலை தெலங்கானா உள்துறை அமைச்சர் நாயனி நர்சிம்மா ரெட்டியும் பாதிக்கப் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சூர்யாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கியால் சுட்டது தீவிரவாதிகளா என்பது குறித் தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.