இந்தியா

பிஹார் புயலுக்கு 42 பேர் பரிதாப பலி

பிடிஐ

பிஹார் மாநிலத்தில் நேற்று முன் தினம் இரவு திடீரென பலத்த புயல் வீசியதில் 42 பேர் பலியாயினர்.

பூர்ணியா, மாதேபுரா, சஹர்ஸா, மதுபனி, தர்பங்கா, சமஸ்திபூர், மால்டா ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு கடுமை யான புயல் வீசியது. இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்தன.மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான குடிசைகள் இடிந்து விழுந்தன. சோளம், கோதுமை மற்றும் பயறுவகை பயிர்கள் நாசம் அடைந்தன.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆர்.கே.கிரி பாட்னாவில் கூறும்போது, “நேபாளம் திசையிலிருந்து வீசிய இந்த புயல் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் தாக்கியது. பூர்ணியா, சீதாமாரி, தர்பங்கா ஆகிய மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பருவத்தில் புயல் வீசுவது இயல்பானது தான். இது ‘கால் பைசாகி’ என்று அழைக்கப்படுகிறது” என்றார். இந்தப் புயலுக்கு மாநிலம் முழுவதும் 42 பேர் பலியாயினர். 80-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.

புயலில் பலியானவர்களின் குடும்பத்தி னருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT