நாட்டில் முதல் முறையாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலான மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரெனாக்சோல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சீனிவாஸ் குமார் கூறியதாவது:
நம்முடைய நாட்டில் மக்கள் கிரிக்கெட்டை தங்களின் மதமாக கருதும் சூழல் உருவாகியுள்ளது. அதிகளவிலான பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு மக்கள் கிரிக்கெட் விளையாட்டை ரசித்து வருகிறார்கள். இரவு நேரங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்காக அதிகளவில் மின்சாரம் செலவிடப்படுகிறது. எனவே சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய சின்னசாமி கிரிக்கெட் மைதான நிர்வாகம் திட்டமிட்டது.
இதன் விளைவாக நாட்டில் முதல் முறையாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் சூரிய ஒளி மின் தகடுகள் (சோலார் பேனல்) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இதனை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களில் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் தகடுகளை மேற்கூரையில் அமைக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசும், மாநில அரசும் உதவ வேண்டும்'' என்றார்.