சமீபகாலங்களில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக மக்களவையில் ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, “எந்த ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்தன என்பது குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாக” உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மக்களவை பூஜ்ஜிய நேரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், தேவாலயங்கள் மற்றும் இதர வழிபாட்டுத் தலங்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
“சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இது மிகவும் அபாயகரமான போக்கு. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என பிரதமர் அளித்த உறுதி என்னவானது” என அவர் கேள்வியெழுப்பினார்.
அவருக்கு ஆதரவாக மல்லிகார்ஜுன கார்கேவும் பேசினார். அப்போது பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவையில் அமளி செய்கின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும், “எந்த ஆட்சிக் காலத்தில் தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்கள் மீது அதிகம் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டால், அதைச் செய்ய நான் தயாராகவே இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதற்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடது சாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.
இவ்விவகாரத்தால், அவையில் சிறிது நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கீதை புனித நூல்
பாஜக உறுப்பினர் ராம் சரித்திர நிஷாத் பூஜ்ஜிய நேரத்தில் பேசும்போது, “கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும். இதற்கு மற்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
நவீன உலகில் மக்கள் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சினைகளுக்கும் கீதையில் தீர்வு உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இதர உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி கீதையை பரிசாக அளித்தது பெருமைக்குரிய விஷயம்” என்றார்.