விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற முழு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஷமீமா ஃபரூக்கி. இவரது கணவர் ஷாஹித் கான் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டதையடுத்து ஷமீமாவுக்கு மாதம் ரூ.4,000 ஜீவனாம்ச தொகை வழங்க கடந்த 98-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நாயக் பதவியில் பணியாற்றிய ஷாஹித் கான் 2012-ம் ஆண்டு ஓய்வுபெற்றதையடுத்து, ஜீவனாம்ச தொகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஜீவனாம்ச தொகையை ரூ.2,000 ஆக குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஷமீமா தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரஃபுல்ல சி.பந்த் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-ன் படி, விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும், ஜீவனாம்ச தொகையை முழுமையாக பெற உரிமை உண்டு.
இந்தக் காலத்தில் ரூ.2,000 பணத்தை வைத்து என்ன செய்ய முடியும். வேலையில்லை, தொழிலில் நஷ்டம் போன்ற சாக்கு போக்குகளை ஜீவனாம்சம் விஷயத்தில் காரணமாக ஏற்க முடியாது. ஜீவனாம்ச தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.