இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார்.
தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக வைகோவையும், மதிமுக தொண்டர்களையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக போராட்டத்தின் போது பேசிய வைகோ: "மோடி பதவியேற்பு விழாவில், ராஜபக்சே கலந்து கொள்வதால் அந்த நிகழ்ச்சியின் புனிதத் தன்மை கெட்டுவிடும்" என்றார். மேலும், ராஜபக்சேவை மட்டுமே எதிர்ப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்கவில்லை என்றும் கூறினார். நரேந்திர மோடிக்கு நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
நரேந்திர மோடி, பதவியேற்பு விழாவுக்கு சார்க் கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடந்த போர்க்குற்றங்களுக்கு காரணமான ராஜபக்சே இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கூடாது என மதிமுக, அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக ராஜபக்சே வருகையை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தது.
ஆனால் எதிர்ப்பையும் மீறி, ராஜபக்சே வருவது உறுதியானதால் டெல்லியில் தனது தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்தார்.
அதன்படி இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு காரணங்களை முன்வைத்து நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ உருக்கமாக கடிதம் எழுதியிருந்தார்.
அதில், லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை, குழந்தைகள், பெண்கள், மூத்தோர் உள்ளிட்ட தமிழ் மக்களைக் கொன்று குவித்த மன்னிக்க முடியாத இனப்படுகொலையை நடத்திய மகிந்த ராஜபக்சே பதவியேற்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.